Tuesday, 11 December 2012

WHY WE DEMAND BONUS CEILING OF 60 DAYS AND RS.3500/- TO BE REMOVED?

அனைவருக்கும் உற்பத்தியோடு இணைந்த போனஸ் உச்சவரம்பின்றி வழங்கிடுக:

ரயில்வே, பாதுகாப்புத்  துறையின் உற்பத்திப் பிரிவுகள், மற்றும் அஞ்சல் துறை ஊழியர்களுக்கு ’உற்பத்தியோடு இணைந்த போனஸ்’ வழங்கப்படுகிறது. இதர மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத அட்ஹாக் போனஸ் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்குமாறு நான்காம் மற்றும் ஐந்தாம் ஊதியக்குழுக்கள் பரிந்துரை செய்தும் மைய அரசு இதுவரை அமுலாக்கிடவில்லை. அத்துடன் உற்பத்தியோடு இணைந்த போனஸ் வழங்குவதில் கூட இலாகாவுக்கு இலாகா மாறுபாடுகள் உள்ளன. உதாரணமாக அஞ்சல் துறையில் உற்பத்தி அளவின்படி எவ்வளவு நாட்கள் போனஸ் கணக்கீடு இருந்தாலும், 60 நாட்களுக்கு மேல் போனஸ் வழங்கக் கூடாது என்ற உச்சவரம்பு அமுலாக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வே, பாதுகாப்புத் துறைகளில் அப்படி உச்சவரம்பு எதுவும் இல்லை.  பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் அரசு ஊதியக்குழுக்களின் பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அட் ஹாக் போனஸ் 30 நாட்கள் என்னும் எண்ணிக்கையை எப்போதும் தாண்டுவதில்லை; ஆனால் உற்பத்தியோடு இணைந்த போனஸ் கணிசமாகக் கூடியிருக்கிறது. ஆகவே அட் ஹாக் போனஸ் என்பதை உற்பத்தியோடு இணைந்த போனஸாக மாற்றுவதை விரைவுபடுத்துமாறு டி.ஓ.பி.டி இலாகாவை அரசு வலியுறுத்தவேண்டும்.



உற்பத்தியோடு இணைந்த போனஸ் அல்லது அட் ஹாக் போனஸ் முறை இரண்டும் போனஸ் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படவில்லை; இருந்தும் போனஸ் சட்டத்தின் பெயரால் ஒரு மாத ஊதியத்தை 3500 ரூபாய் என்னும் உச்சவரம்பால் கட்டுப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அஞ்சல் துறை ஒரு படி மேலே சென்று தங்கள் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு உச்சவரம்பு ரூ.2500/- மட்டுமே என்று அறிவித்துள்ளது. அஞ்சல் துறையின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு காசுவல் ஊழியர் கூட மாதம் 3500/- க்கு மேல் ஊதியம் பெறுகின்றனர். ஆறாம்  ஊதியக்குழு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.7000/- ஆகும்.  தேவையின்றி மாத ஊதியத்தை போனஸ் சட்டத்தின் உச்சவரம்போடு பொருத்தியதால் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுக்கு உரிய போனஸ் கிடைப்பதில் இருந்து தடுக்கப்படுகின்றனர்.


அனைவருக்கும் அவரவர் ஊதியத்திற்கேற்ப போனஸ் பெறுவதை அரசு உத்தரவாதப்படுத்தவேண்டும் என்பதும்; எல்லோருக்கும் உற்பத்தியோடு இணைந்த போனஸ் முறையை அமுலாக்க வேண்டும் என்பதும்; போனஸ் நாட்களில் உச்சவரம்பு எதையும் அமுலாக்கக்கூடாது என்பதும் மகாசம்மேளனத்தின் 12.12.12 வேலைநிறுத்தக் கோரிக்கையாகும்.


No comments: