Wednesday 12 December 2012

GREAT SUCCESS


நன்றி ! நன்றி!! நன்றி !!!

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! அன்பார்ந்த வணக்கங்கள் ! 

இன்றைய  நாள் .......  இனிய நாள் !தமிழக  அஞ்சல் தொழிலாளர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் ............. ஆம் .  12.12.2012.........  இது ஒரு வரலாற்று நிகழ்வு நாள் ............. 11, 12.07.1960 வேலை நிறுத்தம் போல, 19.09.1968 வேலை நிறுத்தம் போல ...... இது  ஒரு வரலாற்று சிறப்பு மிக்க  வேலை நிறுத்த நாள்  .... 

நம் அஞ்சல் அரங்கில்,  NFPE  இயக்கத்தின் தனித்த வேலை நிறுத்தம்  என்றாலும் ..... காணும் இடம் நோக்கினும் ..........  பேதம்  ஏதுமின்றி  ஓரணியாய் ........ ஒரே குரலாய் ....... ஓங்கி ஒலித்தது  NFPE  இன்  சங்க நாதம் ............. இது தான் வெற்றி .........வட திசை நோக்கி .............  இமயத்தின்  திசை நோக்கி .......... தமிழகத்தின்  வெற்றி சங்க நாதம் .......... ஓங்கி  ஒலித்தது  ஒரே குரலாய் ............ நாளைய வரலாற்றுக்கு  கட்டியம் கூறுவது .......... இன்றயை தமிழகத்தின் குரல்  ஒன்றே !



கோரிக்கை தீர்வு நோக்கி  5 ஆவது கட்ட போராட்டம் என்றாலும் ....... மிகப் பெரிய  போராட்டங்கள் ......... 26.07.2012 பாராளுமன்றம் நோக்கிய பேரணி ........அதில் மத்திய அரசு ஊழியர் மொத்தம் 20000  பேரில்   தமிழக அஞ்சல் பகுதியில் இருந்து  ஆயிரம் பேருக்கு மேல் நாம் கலந்து கொண்டோம் என்பது  இதுவரை இல்லாத ஒரு வரலாற்று நிகழ்வு ........ அதிலும்  தமிழக அஞ்சல் மூன்றில் இருந்து  600 க்கும் மேலே ........ இதுவரை இல்லாத புதிய நிகழ்வு ...........


இரண்டாவது பெரிய  நிகழ்வு ....... 12.12.12  மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம் .......... இதில் நம் பங்கு .........  இது வரை இல்லாத அளவில் ............. தமிழகம் முழுமைக்கும் ........ NFPE  இல்  90%............. மொத்த ஊழியர்  எண்ணிக்கையில்  80%....... இந்த  ஒற்றுமை  சாத்தியம் தானா ?


சாத்தியம் ஆயிற்று என்பது  இன்றைய   அஞ்சல் மூன்றின்  அங்கீகாரத்திற்கு பின்னரான நிகழ்வு .......  இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி ...... ஒன்றுபட்ட ........ தொழிலாளர் கோரிக்கை மீதான ஈடுபாட்டுக்கு கிடைத்த வெற்றி ......... தனி மனித விருப்பு வெறுப்புகளைத் தூக்கி எறிந்த வெற்றி . NFPE  இன் பெயராலே  நாம் ஒன்று பட்டதன் வெற்றி ...... இதுதான்  ஆரோக்கியம் ......  தனிப்பட்ட பிரச்சினைகள் அரங்குகளின் விவாதத்திற்குள்ளே ......  பொதுப் பிரச்சினைகளில் என்றும் நாம் ஒன்றே ........  குறுகிய வட்டங்களை விட்டு நாம்  விடுபட்டதன் அடையாளம்  இந்த வேலை நிறுத்தம் ....... இந்த திசை நோக்கி நாம்  சிந்திப்போம் ........... NFPE  இன் ஒரே குரலாய் இனி நாம் ஒலிப்போம் ! இதுவே வெற்றி !


16 லட்சம் மத்திய அரசு ஊழியர் போராட்டத்தில்  இது ஒரு பகுதி ..... ஏழாவது ஊதியக்குழு நோக்கி ...... 50% பஞ்சப்படி இணைப்பு நோக்கி,  புதிய  பென்ஷன்  திட்டத்திற்கு எதிராக .......GDS  ஊழியருக்கும்  ஊதியக்குழுவே  அவர்களது ஊதிய, இதர பணித்தன்மைகளை  பரிசீலிக்க வேண்டி ....போனஸ் உச்ச வரம்பு நீக்கிடக் கோரி ... அடுத்த கட்ட போராட்டத்திற்கு ...... ரயில்வே, பாதுகாப்புத் துறை ஊழியர்களையும்  ஒன்றுபடுத்தி ... காலவரையற்ற  வேலை நிறுத்த தயாரிப்புகளை  நாம்  செய்திட உள்ளோம் ........ 


அனைத்து மத்திய அரசு ......... மாநில அரசு....... பொதுத்துறை ஊழியர்களுக்கும் கோரிக்கைகளை முன்னெடுக்கும் முன்னோடியான   சம்மேளனமாக  நம் NFPE  விளங்கும்  என்பது கடந்த கால வரலாறு. அதனால் தான்   NFPE  இயக்கத்தை ' THE VAN GUARD  OF THE CENTRAL GOVERNMENT EMPLOYEES MOVEMENT '  என்று  அன்றே கூறினார்கள். இன்றும் அந்த வழியில்  நாம் முன்னெடுத்தோம்  கோரிக்கைகளை !  வென்றெடுப்போம்  நாளைய  வெற்றிகளை ! இதுவே எதிர்கால வரலாறு !


ஒரு சில இடங்களில்  நம் தோழர்கள்  தம்மைத்  தாமே   பரிசீலிக்க வேண்டிய நேரமிது .. தனிப்பட்ட  மன உணர்வுகள் இயக்கத்தை சிதைத்துவிடும்  என்பதை  அவர்கள் உணர வேண்டுகிறோம்..... இயக்கம் இருந்தால் தான் அவர்களே இருப்பார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டுகிறோம்....... தம்  மன நிலைகளில் மாற்றம் பெற நாம் அன்போடு வேண்டுகிறோம் ...... அந்த இடங்கள் வெகு சிலவேனும் ........ அவற்றைக் குறியிட்டுக் காட்ட நாம் மனம் ஒப்பவில்லை எனினும்  .......  தேவை அவர்களின் மன மாற்றமே !  அது அவர்களே  அறிய ...... உணர வேண்டிய உண்மையாகும்.  அந்த  திசை நோக்கி சிந்திக்க அன்புடன்  வேண்டுகிறோம் ..... நம் அடுத்த கட்ட  போராட்டம்  90% வெற்றி அல்ல ....100 க்கு 100% வெற்றிக்கான இலக்காக  இன்றே மனதில்  கொள்ள வேண்டுகிறோம்.


இன்றே கோரிக்கை தீர்வு நோக்கி  மத்திய அரசு பரிசீலிக்க  , தீர்வு காண அதன் அனைத்து துறைகளிலும்  நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில்  நம் கோரிக்கையின் குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டுள்ளது . தனித்து நின்றவர்கள் எல்லாம் , தடுக்கி விழுந்தவர்கள் எல்லாம் ,  அன்றைக்கு மீசையில் ஒட்டிய மண்ணை இன்றைக்கு NFPE  துடைக்கும் என்று  எண்ணுகிறார்கள் ...... இந்த ஆலவிருட்ச நிழலில்  தாங்கள் காய் பறித்து  'கதைக்கலாம்'  என்று எண்ணுகிறார்கள் . இது நூறாண்டுகள் கடந்த  இயக்கம் ..... அனைத்து தொழிலாளர்கள் இயக்கங்களுக்கும் முன்னோடியான  இயக்கம் ....  நேற்று பெய்த  மழையில் முளைத்த  காளான்கள் ...... மழை முடியுமுன்னரே அழிந்த வரலாறு தான் இங்குண்டு .  


60 ஆண்டுகள் கடந்த காங்கிரஸ்   பேரியக்கம் , 'இரும்பு மனிதர்' என்று பகரப்பட்ட  இந்திரா காந்தி அம்மயாராலேயே தமக்கென 1968இல்   உருவாக்கிய FNPO இயக்கம்,  44 ஆண்டுகள் கடந்த பின்னரும் , இன்று வரைகூடNFPE  க்கு எதிராக  15% உறுப்பினரின் நம்ம்பிக்கையை கூட பெறமுடியவில்லை என்பது  இயக்க வரலாறு .


வலிமை வாய்ந்த பாரதீய ஜனதா  அமைச்சர்கள் அத்வானி, வாஜ்பாய்  போன்றோர்கள்  , 1977 ஜனதா கட்சி அரசில் , தமக்கென  உருவாக்கிய BPEF  இயக்கம், 35 ஆண்டுகள் கடந்த பின்னரும்  , NFPE  க்கு எதிராக 5% உறுப்பினரின் நம்பிக்கையை கூட பெற முடியவில்லை என்பதும் இயக்க வரலாறு. 


இன்று நம்மால் தோற்றுவிக்கப்பட்ட  'அய்யாக்கள் '  நாளைய வெற்றியை  பங்கு போடும்  ' அப்பாக்களா ?'   அப்படியாயின்  அவர்கள் ஏழு நாட்கள் தனித்தே  போராடி என்ன செய்தார்கள்? . 'கருணையோடு பரிசீலிப்பீர்கள் என்பதால்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை   கைவிடுகிறேன்' என்று   தாமே ஓடிப்போய் கதறியழுது ஏன்  சொன்னார்கள்? 17.12.2008 வேலைநிறுத்த  மாவீரர்கள் , கோபிநாத்  கமிட்டியை விடுத்து , ஓராண்டு கழித்தும் ' நடராஜமூர்த்தி' கமிட்டியின் அறிக்கையைக்கூட  பெறமுடியாத நிலை போலத்தான் இதுவும்.  அதுவும் கூட NFPE  இன் 06.10.2009 காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பின் பின்னாலே 09.10.2009 இல் வெளியிடப்பட்டது போலத்தான் இன்றைய நிலையும்  .


குப்பைகளைத் தூக்கி எறியுங்கள் . ஊழியர்களை ஒன்று  படுத்துங்கள். எதிர்காலம்  இருண்ட காலமாக  இருக்கிறது . அதில் NFPE  என்ற ஒளி  விளக்கு ஒன்றே  பாதை வகுக்கும் என்பது  நம்  வரலாறு .  தனியார்மய  காலத்தில், அந்நிய மய  காலத்தில்  , நம் தொழிற்சங்கப் பாதை  நிச்சயம் மலர்ப்பாதை அல்ல . முட்களும் , பாம்புகளும்  நிறைந்ததே அந்தப் பாதை. ஆனாலும் அதில் பயணிக்க வேண்டியே உள்ளது .  


சங்கம் அமைக்கக் கூட தடை போடப்பட்டு மனமகிழ் மன்றம் அமைத்தும்  தொழிற்சங்கப் பாடம் சொல்லி ஊழியர்களை ஒன்று திரட்டி,  தன்னை இழந்த  பாபு  தாராபாதா போன்ற உத்தமத் தலைவர்களின்   வரலாற்றை  நாம் நினைவில் கொள்வோம்.  அந்த திசை நோக்கி பயணிப்போம்.


போராட்டத்தில்  உடன் நின்ற ஆயிரம் ஆயிரம்  அன்புத் தோழிய/ தோழர்களுக்கு   மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி ! கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  சங்க முன்னோடிகளுக்கும்  நம்  நெஞ்சார்ந்த நன்றி. ! தொழிற்சங்க வரலாற்றில்  இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை!
இன்றைய நம்  இலக்கு ஏழாவது ஊதியக்குழு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளின் நிறைவே!   அந்த திசை நோக்கி அடுத்த கட்ட போரட்டத்திற்கு  நாம் தயாராவோம். 

NFPE  இன் வெற்றி உங்களின் வாழ்வு!.
 உங்களின் போராட்டம்  நம் அனைவரின் எதிர்காலம் ! .

   நன்றி தோழர்களே ! நன்றி !

No comments: