Sunday, 9 December 2012

50% பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011 முதல் இணைக்க வேண்டும் என்று ஏன் கோருகிறோம் ? சரிதானா ?


மத்திய அரசு  ஊழியர்களின் ஊதிய உயர்வுகள் எப்போதும் ஊதியக்குழு பரிசீலனைகள் மூலமே அமுலாக்கப்படுகின்றது. பொதுவாக ஊதியக்குழுக்கள் முழுமையாகப் பரிசீலனை செய்வதால் காலதாமதம் ஏற்படுவது இயற்கை. முந்தைய ஊதியக்குழுக்கள் ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளில் போதுமான பரிசீலனை செய்துவிட்டதால், ஆறாம் ஊதியக்குழு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே எடுத்துக்கொண்டாலும் பலவித முரண்பாடுகளை உள்ளடக்கியதாகவே  பரிந்துரைகள் அமைந்துவிட்டன. கிராக்கிப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது என்பதே உண்மை ஊதியத்தில் தொடர்ந்து ஏற்படும் தேய்மானத்தால் உருவாகும் இழப்பை சரிகட்ட காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வழி முறையாகும். 


எப்போதெல்லாம் கிராக்கிப்படி அளவை 50 சத எல்லையைத் தாண்டுகிறதோ அப்போதெல்லாம் எல்லா நோக்கங்களுக்காகவும் பொருந்தும் வகையில் கிராக்கிப்படியை அடிப்படை ஊதியத்தோடு இணைத்திடவேண்டும் என்று ஐந்தாம் ஊதியக்குழு பரிந்துரைத்தது. அதன்படி ஆறாம் ஊதியக்குழு அமையுமுன்பே 50 சதம் கிராக்கிப்படி அடிப்படை ஊதியத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறாக இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கையாக கிராக்கிப்படி இணைப்பு வழங்குதல் என்பதை இரண்டாம் ஊதியக்குழுவிற்குப் பிற்பட்ட காலத்தில் ’காட்கில் கமிட்டி’ முதன் முதலில் பரிந்துரைத்தது. 

பின்பு மூன்றாம்  ஊதியக்குழு கிராக்கிப்படி அடிப்படை அளவையை 200 விலைவாசிப் புள்ளிகளில் நிர்ணயித்து, அது எப்போது 272 புள்ளிகளைத் தாண்டுகிறதோ அப்போது  72 புள்ளிகளுக்கான கிராக்கிப்படியை அடிப்படை ஊதியத்தோடு இணைக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது. நான்காம் ஊதியக்குழு அமைவதற்கு முன்பு மைய அரசு கூட்டு ஆலோசனைக்குழு விவாதத்தில் துவக்கத்தில் 60 சதம் கிராக்கிப்படியை இணைக்க ஒத்துக்கொண்டிருந்தாலும்,  பின்னர் மொத்த கிராக்கிப்படியையே இணைக்க இசைந்தது. ஐந்தாம் ஊதியக்குழு 98 சதம் கிராக்கிப்படியை அடிப்படை ஊதியத்தோடு இணைத்தது. ஆனால் ஆறாம் ஊதியக்குழுவோ எந்தவிதமான கிராக்கிப்படி இணைப்பையும் அடிப்படை ஊதியத்தோடு செய்யக்கூடாதென்ற எதிர்மறையான பரிந்துரையை வழங்கியுள்ளது. மத்திய அரசு மோசமான் இப்பரிந்துரையை ஏற்று கிராக்கிப்படியை இணைப்பதில்லை என்று அடம் பிடித்து வருகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் உண்மை ஊதியத்தில் ஏற்பட்டு வரும் தேய்மானத்தையும் இழப்பையும் ஈடுகட்டும் ஒரே வழியும் அடைபட்டுள்ளது.


ஐந்தாம் ஊதியக்குழு பரிந்துரை அமுலாக்கப்பட்டு 50 சதம் கிராக்கிப்படி இணைக்கப்பட்டபோது, அதே போன்ற நன்மை மூன்று லட்சம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டது. அவர்கள் அரசு ஊழியர்களல்லவென்றும் ஆதலால் அவர்களுக்கு இணைக்க முடியாது என்றும் அரசு அநியாயமான நிலை எடுத்தது. ஆனால் பின்னர் ஓரளவு இழப்பை ஈடுசெய்யும் வண்ணம் ஐந்து சத ஊதிய உயர்வை அவர்களுக்கு அமுல்படுத்தியது. இதுபோன்ற  இரட்டை நிலையை ஏற்க இயலாது.


ஆகவே உடனடியாக 50 சதம் கிராக்கிப்படியை 1.1.2011 முதல் இணைப்பதை அரசு உத்தரவிடவேண்டும்; அந்த இணைப்பு சகல சலுகைகளுக்கும் உரிமைகளுக்கும் அமுலாக்க வேண்டும்; ஜி.டி.எஸ் ஊழியருக்கும் 50 சதம் கிராக்கிப்படியை அவர்களின் அடிப்படை ஊதியத்தோடு இணைக்கவேண்டும் என்பதே 12.12.12 வேலை நிறுத்தத்தின் இரண்டாவது முக்கியக் கோரிக்கை. 

                                                                    தொடரும்....        

No comments: