கடந்த 10.08.2013 அன்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின் அடிப்படையில் , நமது முழு வீச்சிலான நடவடிக்கை !
30 பக்க கோரிக்கை மனு தயாரிப்பு ! PMG , SR உடன் சந்திப்பு ! பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் !
தென் மண்டலத்தில் தானடித்த மூப்பாக செயல்பட்டு ஊழியர்களை சொல்லொணாத் துயரத்தில் ஆட்படுத்தி வந்த தென் மண்டல இயக்குனர் அவர்களின் பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தோலுரித்து காட்டும் பட்டியல் நமது கோரிக்கை மனுவின் முதல் பகுதியாகவும் , அஞ்சல் மூன்று, RMS 3 , RMS 4, GDS உள்ளிட்ட அனைத்து கோட்ட / கிளை பிரச்சினைகளையும் பட்டியல் இட்டு இரண்டாவது பகுதியாகவும் தயாரிக்கப் பட்டது. மனுவுடன் நாம் பட்டியல் இட்ட பல கோரிக்கைகளுக்கு ஆதரவு ஆவணங்களும் இணைக்கப் பட்டது . அஞ்சல் மூன்றின் முன் முயற்சியால் COC இயக்கமாக மாற்றப்பட்டு , RMS மற்றும் GDS கோரிக்கைகளும் அந்தந்த மாநிலச் சங்கங்கள் மூலம் பெறப்பட்டு இணைக்கப் பட்டது .
நமது செயலாக்கத்திற்கு கிடைத்த முன்னேற்றம் !
நமது வலைத்தளத்தில் நாம் வெளியிட்ட நமது செயலாக்கம் குறித்த பதிவுகளும் , PMG, SR க்கு நாம் 24.08.2013 அன்று அனுப்பிய கடிதமும் நிர்வாகத்தை தட்டி எழுப்பின . பாரா முகமாக இருந்து , தேங்கிக் கிடந்த கோரிக்கைகளின் தீர்வுக்கு வழி செய்யாமல் கிடப்பில் போட்டிருந்த நிர்வாகம் முடுக்கி விடப்பட்டு 03.09.13 அன்று மதியம் மூன்று மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.நிர்வாகத்திடம் DPS அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை நேர் காணலில் தெள்ளத் தெளிவாக எடுத்து வைத்தோம்.
நேர்காணலுக்கு முன்பாகவே
நாம் ஏற்கனவே சிவகங்கை மற்றும் கோவில்பட்டி கோட்டங்களின் பிரச்சினைகள் குறித்து மனு அளித்து உரிய விசாரணையும் மற்றும் உடனடி நடவடிக்கையும் கோரியிருந்தோம். அந்த அடிப்படையில் , நமது COC யின் மனுவைப் பெறுமுன்பே , சிவகங்கை கோட்டக் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்திட உத்தரவு பிறப்பித்தது. கோவில் பட்டி கண்காணிப்பாளரை பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வலியுறுத்தி மண்டல நிர்வாகம் பணித்திருந்தது அந்த அடிப்படையில் மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலர் முன்னிலையில் கோட்ட நிர்வாகம் , கோட்ட JCA தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி 27 அம்சக் கோரிக்கை மீதான எழுத்து மூலமான ஒப்பந்தத்தையும் அளித்தது.
நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த RMS ஊழியர் இடமாற்றல் உத்திரவு குறித்து நாம் அளித்த நியாயமான விளக்கங்களை ஏற்றுக் கொண்டு ஆவன செய்திட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது . பிற கோட்ட பிரச்சினைகள் மீதான நாம் நடத்திய நான்கு மணி நேர விவாதங்களின் அடிப்படையில் RT மீதான SECOND APPEAL மற்றும் , தொழிற் சங்க பிரதிநிதிகளின் IMMUNITY TRANSFER உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலித்திடவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது .
நமது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு !
நீண்ட காலமாக நமது கவனத்தை ஈர்த்து வந்த தென் மண்டல பிரச்சினைகள் குறித்து மண்டல நிர்வாகத்தின் கவனத்தை சரியான முறையில் வலுவாக ஈர்த்துள்ளோம் . விரிவான மனுவும் ஆழமான விவாதங்களும் சுமுகத் தீர்வுக்கு வழி வகுத்துள்ளன . மண்டல நிர்வாகமும் பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொண்டு சுமுகமான தீர்வுக்கு முயற்சி துவங்கியுள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டு சிவகங்கை மற்றும் கோவில்பட்டி கோட்ட கோரிக்கைகளில் அவர்களின் நடவடிக்கையே !
இதனை கருத்தில் கொண்டு , 03.09.13 அன்று இரவு நடை பெற்ற தென் மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டத்தில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் , நான்காம் தேதி நடைபெறுவதாக இருந்த முதற்கட்ட போராட்டம், மனுவினை முழுவதும் படித்து பரிசீலிக்க நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில் 15 நாட்களுக்குள் பிரச்சினை தீரவில்லையானால் நேரிடையாக இரண்டாவது கட்ட போராட்டத்திற்கு செல்வதென முடிவு எடுக்கப் பட்டது.
நமது கோரிக்கை மனுவின் நகல் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் 04.09.2013 அன்று மதுரையில் இருந்து அஞ்சல் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.
சுமுகத் தீர்வுக்கு முயற்சி மேற்கொண்ட தென் மண்டல PMG அவர்களுக்கு நம் COC யின் நன்றி!. பிரச்சினை குறிப்பிட்ட காலவரைக்குள் தீர்க்கப் படவில்லையானால் நாம் நேரிடையாக இரண்டாவது கட்ட போராட்டத்திற்கு தயாராவோம் !
வாழ்த்துக்களுடன்
அஞ்சல் RMS இணைப்புக் குழு,
தமிழ் மாநிலம்.
குறிப்பு :-
நாம் ஏற்கனவே தாம்பரம் கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளரின் ஊழல் மற்றும் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து மனு அளித்து PMG, CCR அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய செய்தியையும் , அம்பத்தூர் கிளைச் சங்கத்தின் அறிக்கையையும் நமது வலைத்தளத்தில் அளித்திருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.
தற்போது தாம்பரம் கோட்ட முதுநிலைக்கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கோரிக்கைகளில் துணிவுடன் நின்ற அம்பத்தூர் கிளைச் சங்க தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள் . PMG, CCR மற்றும் DPS, CCR ஆகியோருக்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றி !
No comments:
Post a Comment