அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு வணக்கம். நம் அமைப்பு ரீதியான சில முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
12.09.2013 அன்று நடைபெற்ற தமிழ் மாநில
அஞ்சல் RMS இணைப்புக் குழு கூட்டம்
12.09.2013 மாலை சுமார் 06.00 மணியளவில் தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு கூட்டம் சென்னை எழும்பூர் RMS அலுவலக மனமகிழ் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். K .ராஜேந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தில் உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள்/ தலைவர்கள் உள்ளிட்ட இதர முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன. அதனை கீழே உங்கள் பார்வைக்கும் செயலாக்கத்திற்கும்தருகிறோம்.
05.10.13 அன்று நடை பெற உள்ள மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலராக தோழர். கிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பின் , பல வேகமான நடவடிக்கை களை நாம் உணர்கிறோம் . நமது அஞ்சல் பகுதியில் இருந்து அவர் சென்றுள் ளதால் , நமது பொறுப்பும் மேலும் கூடுகிறது.
a )அனைத்து மாநிலங்களிலும் வேலை நிறுத்தம் குறித்த கருத்தரங்கம்
நடத்திட பணிக்கப் பட்டது .
b )இதனுடன் அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களிடையே ஏழாவது
ஊதியக்குழு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்
கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்திட ஊழியர் மத்தியில்
வாக்கெடுப்பு நடத்திடவும் முடிவு எடுக்கப் பட்டது.
c )மேலும் இதுவரை மாவட்ட அமைப்புகள் மற்றும் மாநில அமைப்புக்
கான மாநாடுகள் நடத்திடாத இடங்களில் உடன் அந்தப் பணிகளை
முடித்திட தாக்கீது அனுப்பப் பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில்
மாநில மாநாடு எதிர்வரும் 05.10.2013 அன்று சென்னையில் நடத்திட
முடிவெடுக்கப் பட்டுள்ளது.
கடந்த 2003 க்குப் பிறகு 10 ஆண்டுகள் இடைவெளியில் தற்போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது என்பதை நமது இணைப்புக் குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. மேலும் அன்றைய தேதியில் காலையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த கருத்தரங்கில் நமது சம்மேளன மாபொதுச் செயலரும் , மகா சம்மேளன மா பொதுச் செயலருமான தோழர் M . கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்வது மேலும் சிறப்பு சேர்க்கிறது. ஆகவே NFPE இன் அனைத்து உறுப்பு சங்கங்களில் இருந்தும் , அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் இந்த மாநாட்டில் அதிக அளவில் முன்னணித் தோழர்கள் கலந்து கொள்வது என முடிவு எடுக்கப் பட்டது.
அது போல, ஊதியக் குழு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளின் மீதான கால வரையற்ற வேலை நிறுத்தம் குறித்த ஊழியர் மத்தியில் வாக்கெடுப்பு என்பது மிக முக்கியமான முடிவு. 1983 க்குப் பிறகு 30 ஆண்டுகள் இடைவெளியில் நமது அஞ்சல் பகுதியில் தற்போதுதான் நாம் இந்த முடிவினை மேற்கொள் கிறோம். இதனை எதிர்வரும் செப்டம்பர் 25,26 மற்றும் 27 ம் தேதிகளில் நாம் தல மட்டத்தில் நடத்தி முடிவினை தலைமைக்கு அறிவிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே வேலை நிறுத்தம் குறித்த சட்ட பூர்வமான நோட்டீஸ் அரசுக்கு வழங்கப் படும்.
இது குறித்து ஆங்கிலத்தில் நமது சம்மேளனம்/ அகில இந்திய சங்கங்கள் அளித்துள்ள அறிக்கைகள் தெளிவான வழி காட்டுதலை நமக்கு அளித்துள்ளன. நமது தமிழ்மாநில இணைப்புக் குழு சார்பாக தமிழில் மேலே கூறிய நிகழ்வுகள் குறித்து ஓரிரு நாட்களில் விரிவான சுற்றறிக்கை வெளியிடப் படும். ஆகவே இந்த வலைத்தள அறிக்கையை முன்னோட்டமாகக் கொண்டு உடன் நமது கோட்ட / கிளைச் செயலர்கள் உறுப்பினர்களிடையே பிரச்சார இயக்கத்தை தொடங்கிட வேண்டுகிறோம். மேலும் பெருமளவில் எதிர்வரும் 05.10.2013 அன்று நடைபெற உள்ள மகா சம்மேளனத்தின் கருத்தரங்கு மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டிடவும் வேண்டுகிறோம்.
இந்த இணைப்புக் குழுக் கூட்டம் , நீதி மன்ற வழக்கில் பிரச்சினைக் குள்ளான அஞ்சல் நான்கு மாநிலச் சங்கம் , கருத்தொற்றுமை ஏற்பட்டு , நீதி மன்றத்தில் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏகமனதாக வரவேற்றது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அஞ்சல் நான்கு மாநிலச் சங்கம் மீண்டும் தோழர். V . ராஜேந்திரன் அவர்களை மாநிலச் செயலராகக் கொண்டு முழு அங்கீகாரத்துடன் செயல்பட உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இனி NFPE இயக்கத்திற்குள் தடைகள் எங்கும் இருக்காது என்பது , நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே !
மேற்கு மண்டல தொழிற்சங்க பயிலரங்கு மற்றும்
கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்
ஏற்கனவே நமது குடந்தை தமிழ் மாநில மாநாட்டில் அறிவித்த படி , முதல் கட்டமாக தென் மண்டலத்தில் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டமும் , தொழிற் சங்க பயிலரங்கும் நாம் கடந்த மாதம் நடத்தினோம். அதன் தொடர் நிகழ்வுகள் போராட்ட வடிவில் தற்போது உள்ளது என்பது உங்களுக்கு தெரிந்ததே .
அடுத்த கட்டமாக , மேற்கு மண்டலத்தில் எதிர்வரும் 28.09.2013 சனி அன்று , மேற்கு மண்டல அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டமும் 29.09.2013 ஞாயிறு அன்று மேற்கு மண்டல அளவிலான தொழிற் சங்க பயிலரங்கும் நடத்திட முடிவெடுக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம் : ராமாயம்மாள் கல்யாண மண்டபம்,
சுப்பிரமணியர் கோயில் அருகில் ,கொளத்தூர், மேட்டூர் .
இந்த இடம் மேட்டூர் அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் , மேட்டூர் அணைக்கு பின் புறம் இயற்கை எழில் கொஞ்சும் அழகான பகுதியில் அமைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கொளத்தூருக்கு நகரப் பேருந்துகள் 6, 7,12,12A ,20, 20A ,33 உள்ளிட்ட சேலம் - மைசூர் பேருந்துகளும் உள்ளன.
இது குறித்து விரிவான சுற்றறிக்கை அடுத்த வாரத்தில் உங்களுக்கு அனுப்பப் படும் . இந்த வலைத்தள அறிவிப்பை முன்னோட்டமாக கொண்டு , தென் மண்டல நிகழ்ச்சிகள் போல மேற்கு மண்டலத்திலும் சிறப்பாக நடந்திட உடன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோட்ட/ கிளைச் செயலர்களை வேண்டுகிறோம். மேற்கு மண்டலத்தில் உள்ள மண்டலச் செயலர் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் இதற்கான பொறுப்பெடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வேண்டுகிறோம்.
நன்றியுடன்
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று , தமிழ் மாநிலம்.
No comments:
Post a Comment