Tuesday 11 December 2012

WHY WE DEMAND DEPARTMENTALISATION OF GDS EMPLOYEES ?


ஜி.டி.எஸ் ஊழியரை இலாகா ஊழியராக்கிடுக:

ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அடுத்து மிக அதிக ஊழியர்களைக் கொண்ட துறை அஞ்சல் துறையாகும். ஆனால் அத்துறையில் மூன்று லட்சம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை மொத்த அஞ்சல் துறை ஊழியர்களில் கிட்டத்தட்ட 60 சதமாகும். ஈ.டி முறை என்பதாக நிலவிய இம்முறை வெள்ளை அரசால் கிராமப்புறங்களில் குறைந்த செலவில் அஞ்சல் துறையை நிர்வகிக்கத் துவக்கப்பட்ட சுரண்டல் முறையாகும்.  1977-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஈ.டி ஊழியர்களை அரசு ஊழியர்களாகக் கருதவேண்டும் என அறிவித்தது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு மட்டும் அரசு ஊழியர்களைப் போல் நடத்திக்கொண்டு, இதர சலுகைகள் உரிமைகளுக்காக அரசு ஊழியர்களாகக் கருத இயலாது என்பதான இரட்டை நிலையைக் கடைப்பிடித்தது அஞ்சல் துறை. தொடர்ச்சியான இயக்கங்கள் மூலம் சிற்சில சலுகைகளை ஈ.டி. ஊழியர்களுக்காக வென்று வந்தாலும், அவர்களும் அரசு ஊழியர்களாக அந்தஸ்து பெறுவதை வெல்ல இயலவில்லை. ஐந்தாம் ஊதியக்குழுவோடு ஈ.டி ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி தள்வார் குழுவும் ஈ.டி ஊழியர்களை இலாகா ஊழியர்களாக அறிவித்து, நிரந்தர அரசு ஊழியர் பெறும் அத்துணை சலுகைகளையும் வழங்கப் பரிந்துரை செய்தது. ஆனாலும் அரசும், அஞ்சல் துறையும் அடாவடித்தனமாக நிராகரித்து வருகின்றன.


அஞ்சல் இலாகாவின் ஆலோசனையை ஏற்று, ஆறாம் ஊதியக்குழு காலத்தில் அடாவடித்தனமாக ஓய்வு பெற்ற அதிகாரி நடராஜமூர்த்தி தலைமையில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதியம் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அரசு அமைத்தது. அதன் சிபாரிசுகள் கடும் அதிருப்தியை உருவாக்கியது. அக்கமிட்டியின் சிபாரிசுகளால் முன்னிருந்ததை விடவும் மிக மோசமான நிலைக்கு ஜி.டி.எஸ் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசின் கிராமப்புற வளர்ச்சி நலத் திட்டங்களை ஜி.டி.எஸ் மூலம் அமுலாக்கவைத்து அவர்களை நிரந்தர ஊழியராக்குவதற்கு  பதில், நடராஜ மூர்த்தி கமிட்டியின் பெயரால் அவர்களை வஞ்சித்து வருகிறது அஞ்சல் துறை. ஜி.டி.எஸ் ஊழியர்களுக்காக மட்டுமே  கிடைத்துவந்த அனைத்து தபால்காரர்கள், நான்காம்பிரிவு ஊழியர்கள் காலி இடங்கள் குறைக்கப்பட்டு ஒரு பகுதி ஊழியர்கள் வெளிமார்க்கெட்டில் இருந்து தேர்வு செய்யப்படவேண்டும் என்று இலாகா அறிவித்தது. கடும் எதிர்ப்பினால் தபால்காரர் பதவிகளில் வெளிமார்க்கெட் தேர்வுக்கான ஒதுக்கிட்டைக் கைவிட்டாலும், MTS ஊழியர்களில் இருந்து பதவி உயர்வில் நிரப்பப்படாத காலி இடங்கள் வெளிமார்க்கெட்டுக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது; அத்துடன் 25 சதம் MTS பதவிகள் வெளிமார்க்கெட்டுக்கு என்பதைக் கைவிட அரசு தயாரில்லை. இதனால் மூன்று லட்சம் கிராமப்புற அஞ்சல் ஊழியரின் பதவி உயர்வு வாய்ப்புகள் வெட்டப்பட்டுள்ளன. இந்நிலை மாற்றப்படவேண்டும்; அத்துடன் ஜி.டி.எஸ் ஊழியரை முழுநேர இலாகா ஊழியராக்க ஒரு முறையான திட்டத்தை அரசு கொண்டுவர இசைய வேண்டும் என்பது 12.12.12 வேலைநிறுத்தத்தின் நான்காவது  முக்கியக் கோரிக்கையாகும். 

No comments: